சென்னை:இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப் 20) நடைபெற்றது. மேலும், வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியானது.
இதனையடுத்து விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “இயக்குநர் ஞானவேல் உடன் என்னால் வேலை செய்ய முடியுமா என நினைத்தேன். ஆனால் அவரோட 'ஜெய் பீம்' படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். வேட்டையன் திரைப்படம் மிகவும் நல்ல கதையம்சம் கொண்டது. மிகவும் வித்தியாசமான படம். இதற்கு முன்பு வெளிவந்த படங்களை விட இந்த ரஜினி படம் வேறுபட்டு இருக்கும். இது போன்ற படங்களில் ரஜினிகாந்த் இதுவரை நடித்ததில்லை.
நான் இதுவரை 34 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பல இசை வெளியீட்டு விழாவை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அரங்கத்திற்கு தற்போது வரும் போது இங்கு இருப்பதைப் போல ஒரு உணர்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. இந்த இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் கொடுக்கும் உற்சாகம், இந்த உணர்வைத் தாண்டி எந்த விருதும் எனக்கு பெரிதல்ல” என்றார்.