தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் தீனா!

Music Composers Election: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தலைவராக தீனா போட்டியிடுகிறார்.

இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் தீனா
இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் தீனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 12:42 PM IST

Updated : Feb 13, 2024, 2:12 PM IST

சென்னை: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோஸியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. வரும் பிப்ரவரி 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டடத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாக, சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார்.

மேலும், இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இது குறித்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் தீனா, “அசோஸியேட் உறுப்பினர்களுக்கு எந்த வகை சலுகைகளும் இல்லாமல் இருந்ததோடு, அவர்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட எந்த உரிமைகளும் இல்லாமல் இருந்தது.

இது பற்றி பல உறுப்பினர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நான் முயற்சி மேற்கொண்டு, அவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுத்தேன்.

தற்போது மூன்றாவது முறை நான் தலைவராக வெற்றி பெற்றால், அசோஸியேட் உறுப்பினர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்வேன். திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்தான் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், எங்கள் கட்டடம் இன்னும் பழமையாகவே இருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது.

நான் முதல் முறையாக தலைவராக வந்த போதே, இதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், கரோனா பாதிப்பு வந்ததால் தடைபட்டு விட்டது. தற்போது நான் மீண்டும் தலைவரானால், இந்த முறை சங்கத்தின் கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவேன்” என்று தெரிவித்தார். முன்னதாக இசையமைப்பாளர் சங்கத் தேர்தலில் தீனா மீண்டும் போட்டியிடக்கூடாது என்று, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நோ பொலிடிக்கல் கொஸ்டின்ஸ்.. லோகேஷுடன் இணையும் ரஜினிகாந்த்.. ரஜினியின் பளீச் பதில்!

Last Updated : Feb 13, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details