சென்னை:எம்.சினிமா புரொடக்சன்ஸ் தயாரித்து, இயக்குநர் சாஜி சலீம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் லாந்தர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் செல்லா அய்யாவு, சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விதார்த் பேசுகையில், “லாந்தர் கதை கேட்டதும் ரொம்ப பிடித்திருந்தது. போலீஸ் கதாபாத்திரம் என்றதும் மூன்று மாத காலம் கேட்டேன். இல்லை நீங்கள் சாதாரணமாக வந்தால் போதும் என்று இயக்குநர் சொன்னார். ஏவிஎம் மாதிரி எத்தனையோ புரொடக்சன்ஸ்-ல் வேலை செய்து இருக்கிறேன். ஆனால், பத்ரி மாதிரி தயாரிப்பாளரை பார்த்தது இல்லை. இந்த தயாரிப்பாளர் ஜெயித்தால் 50, 100 படங்களை பண்ணுவார்” என்றார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், “திறமைகள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். அந்த காலத்தில் இருக்கும் பாடல்கள் 50, 60 ஆண்டுகளைக் கடந்தும் நம் மனதில் நிற்கிறது. படம் உங்களுக்குப் பிடித்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், எல்லோரும் பார்க்கட்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பெரிய நடிகர்களின் படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை, நான் நடிக்க தயார். ஆனால், சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருப்பதே மேல்” என்று சிறிய படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.