சென்னை: அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் முடிவடைந்தது.
இதனிடயே அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பும் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது அதற்கு பிறகு இரு படங்களில் அஜித் ஒரே சமயத்தில் நடித்து வந்தாலும் பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் அறிவிக்கப்பட்ட போதே 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப் போனது. விடாமுயற்சி பட போஸ்டர்கள் மட்டும் வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் பொங்கலுக்கு விடாமுயற்சியா அல்லது குட் பேட் அக்லியா என குழப்பத்தில் இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு சர்ப்ரைஸாக விடாமுயற்சி டீசர் ரிலீசானது.