சென்னை: ’விடாமுயற்சி’ படத்தின் சென்சார் அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கடைசி மூன்று வருடங்களாக அஜித் படம் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் அவரை திரையரங்கில் கொண்டாட காத்திருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விடாமுயற்சி திரைப்பட வெளியீடு தள்ளிப் போனதற்கு அப்படம் breakdown படத்தின் ரீமேக் எனவும், அப்படக்குழுவினரிடம் ரீமேக் உரிமையை பெறவில்லை என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், படம் தணிக்கை செய்யப்பட்டு, யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.