சென்னை: இயக்குநர் சுந்தர்.சியின் பிறந்தநாள் பார்ட்டியில் கோலிவுட்டை சேர்ந்த பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜெயராம், கவுண்டமணி ஆகியோர் நடித்த முறை மாமன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என தொடர்ந்து ஹிட் படங்களாக இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றார். இதனைத்தொடர்ந்து வின்னர், கலகலப்பு என தொடர்ந்து நகைச்சுவை படங்களாக இயக்கி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கலந்த காமெடி படங்கள் இயக்கும் இயக்குநர்கள் குறைவாக உள்ளனர். அந்த வரிசையில் சுந்தர்.சி படம் என்றால் காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் எப்போதும் நம்பிக்கையுடன் திரையரங்கிற்கு வரும் அளவிற்கு பெயர் பெற்றுள்ளார். சுந்தர்.சி இயக்கிய ஒரு சில படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவர் இயக்கிய லண்டன், வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பம்படுகிறது. வின்னர் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ’கைப்புள்ள’ கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'மதகஜராஜா'.