லால் சலாம் படக்குழு செய்தியாளர் சந்திப்பு சென்னை:இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று (பிப்.09) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.
இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இன்று படம் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்து, முஸ்லிம் ஒற்றுமை, அரசியலுக்காக இவர்களின் ஒற்றுமை எப்படி சிதைக்கப்படுகிறது. விளையாட்டில் அரசியல் நுழைந்து என்ன செய்கிறது. அரசியல் வாதிகளின் சுயநலம், கோயில் திருவிழா எதற்காக நடத்தப்படுகிறது, நட்பு உள்ளிட்ட விஷயங்களை இப்படம் பேசுகிறது.
இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அதில் நடிகர் விஷ்ணு விஷால் , விக்ராந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஷ்ணு விஷால் பேசுகையில், “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காலையில் ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தோம். ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் சில வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
ஒருவருடமாக அனைவரும் கடின உழைப்பு போட்டுள்ளோம். பாடல்களும் ரசிக்கப்பட்டது. இந்த படம் வழியாக நாங்கள் என்ன சொல்ல வந்தோமோ அது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மதத்தை தாண்டி நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லும் படம் இது. மனிதநேயம் தான் மிகப் பெரிய மதம். தேர் திருவிழா நடக்கும் ஊர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:லால் சலாம்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் பொருந்திய கொடி உடன் திருச்சி ரசிகர்கள்!