தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கருத்து கூறியதே இல்லை” - தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்!

Dhanya Balakrishna: தமிழர்கள் குறித்து கொச்சையாக பதிவிட்டதாகக் கூறி, நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

lal salaam dhanya balakrishna explanation on controversy post on tamil people
நடிகை தன்யா பாலகிருஷ்ணா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 4:29 PM IST

Updated : Feb 4, 2024, 3:55 PM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், லால் சலாம் படத்தில் நடித்திருக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணா, காவிரி விவகார சமயத்தில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்ட சமூக வலைத்தளப் பதிவு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் காணும் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி நடிகையை விமர்சித்து வருகின்றனர். மேலும், தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எற்படும் எனக் கூறி, படத்திற்கு தடை விதிக்க சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது பெயரில் வைரலாகும் அந்த பதிவு குறித்து, நடிகை தன்யா பாலகிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நான் செய்யும் தொழில் மேல் சத்தியம், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்தபோதே நான் இதை தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கிரீன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும், என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்கு சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில்தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். அப்பொழுதும், இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே. அதனால்
விளையாட்டுக்குக் கூட இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும், ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ, செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன்.

அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை. சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை வைத்து உங்களைக் காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும், மன உளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு, உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லால் சலாம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Last Updated : Feb 4, 2024, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details