ஹைதராபாத்:கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் , ’நான் ஈ, 'பாகுபலி’, ’புலி’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். சமீபத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சுதீப் நடித்த ’மேக்ஸ்’ திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் நன்றாக ஓடியது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் கர்நாடகா மாநில அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘பயில்வான்’ திரைப்படத்துக்காக நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. கொரோனோ லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் தாமதமாக இந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிச்சா சுதீப், தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “எனக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை பெரும் மரியாதையாக கருதுகிறேன். என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பல ஆண்டுகளாக விருதுகள் எதையும் பெறக்கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருந்தேன். அதனை தொடர விரும்புகிறேன். நடிப்பிற்காக தங்களை அர்ப்பணித்த என்னைவிட இன்னும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். நான் இந்த விருதை பெறுவதை விட அவர்கள் பெற்றால் சிறப்பானதாக இருக்கும்.