திருவனந்தபுரம்: புதிய திரைப்படங்களை முறைகேடாக இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் குழுவின் அட்மின் ஒருவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். திரையரங்கில் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த போது தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் ஜெப ஸ்டீபன்ராஜ் கேரள சைபர் கிரைம் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த ஜெப ஸ்டீபன்ராஜ் புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது ஜெப ஸ்டீபன்ராஜை கேரள போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த விசாரணையானது ஏற்கனவே தொடங்கியது. அதன்படி குருவாயூர் அம்பலநடையில் படமானது வெளியான அன்று மாலை டெலிகிராமில் வெளி வந்ததாக பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜின் மனைவி சுப்ரியா புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. மேலும், அந்த வீடியோ எந்த தியேட்டரில் பதிவு செய்யப்பட்டது என ஆய்வு மூலம் தியேட்டரை கண்டுபிடித்தோம். அந்த தியேட்டரில் உள்ள உட்புற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆறு பேர் கொண்ட குழுவினர் மொபைல் போனை சீட்டிற்கு அருகில் இருக்கும் ஹொல்டரில் வைத்து படத்தை பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்பு, டிக்கெட் புக்கிங் ஆப் மூலம் அவர்களின் மொபைல் நம்பர் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நம்பரில் இருந்து மே 23, ஜூன் 17, ஜூன் 26, ஜூலை 5 ஆகிய தேதிகளில் டிக்கெட் புக்கிங் ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடிப்பதற்காக காத்திருந்த சூழ்நிலையில், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நம்பரில் இருந்து ராயன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஆகியிருந்தது. அதை வைத்து ஜெப ஸ்டீபன் ராஜை கைது செய்தோம்" என தெரிவித்தார்.
தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காக்நாடு போலீசார் ஸ்டீபன் ராஜை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:"சுதந்திர வரலாற்றில் தமிழர் பங்கு மறைப்பட்டுள்ளது" - 'போட்' பட நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன் ஆதங்கம்! - boat movie tamil