சென்னை: சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’ (Retro) திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது சூர்யாவின் 44வது திரைப்படமாகும். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ’Love laughter war’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா நடிக்கும் திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமல்ல, காதல் கதை என கூறியிருந்தார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களை வித்தியாசமாகவும், மாஸாகவும் சித்தரித்து காட்டுவதில் பெயர் பெற்றவர். அந்த வகையில் சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
சூர்யாவை ரொமான்டிக் படத்தில் பார்த்து பல வருடங்கள் ஆனது என ரசிகர்கள் ஏக்கத்தை போக்கும் வகையில், ரெட்ரோ திரைப்படம் அமையும் என்பது ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளது. அதற்கேற்றார் போல ரெட்ரோ திரைப்படத்தின் டீசர் அமைந்தது. அந்த டீசரில் சூர்யா, பூஜா ஹெக்டேவின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பாராட்டினர். சமூக வலைதளங்களில் பலர் ரீல்சாக பதிவிட்டனர். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ரெட்ரோ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க:எமர்ஜென்சி படம் பார்க்க பிரியங்கா காந்திக்கு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் அழைப்பு! - KANGANA INVITES PRIYANKA GANDHI
இந்நிலையில் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. இந்த வருடம் கோடை விடுமுறைக்கு பல பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் வெளியாகிறது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ’குட் பேட் அக்லி’, தனுஷ் இயக்கி, நடித்துள்ள ’இட்லி கடை’ ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்நிலையில் ரெட்ரோ திரைப்படமும் கோடை விடுமுறைக்கு வெளியாவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.