ஹைதராபாத்: இயக்குநர் அட்லீ பங்கேற்ற நேர்காணலில் உருவகேலி சர்ச்சை எழுந்தது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் கபில் ஷர்மா crew, ஃபிராங்கி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கபில் ஷர்மா The great indian kapil sharma show என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம்.
முன்னதாக ’பொன்னியில் செல்வன்’ படத்தின் புரமோஷனுக்காக கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’பேபி ஜான்’ திரைப்படம் வெளியாகிறது. பேபி ஜான் அட்லீ தமிழில் இயக்கிய ’தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில் பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கபில் ஷர்மா அட்லீயிடம், "நீங்கள் ஒரு ஸ்டாரை சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டதுண்டா?" என கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குநர் அட்லீ, "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது, நான் முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் தான் எனது முதல் படத்தை தயாரித்தார். அவருக்கு நல்ல கதையில் தான் எதிர்பார்ப்பு இருந்தது. எனது உருவம் குறித்து அவர் பொருட்படுத்தவில்லை. அவருக்கு நான் கதை கூறிய விதம் பிடித்திருந்தது. அவ்வாறு தான் ஒருவரை அணுக வேண்டும். ஒருவரது தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. ஒருவரது உள்ளத்தை வைத்து திறமையை அறிய முடியும்" என கூறியுள்ளார்.