ஹைதராபாத்: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் (90) நேற்று மும்பையில் உயிரிழந்தார். மும்பை மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் பெனகல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல்.
1934ஆம் ஆண்டில் செகந்திராபாத்தில் உள்ள திருமலகிரி பகுதியில் பிறந்த ஷ்யாம் பெனகல், இளம் வயது முதல் சினிமா ஆர்வம் கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு ’ஆங்கூர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ’மந்தன்’ (1976), ’பூமிகா’ (1977), ’சர்தாரி பேகம்’ (1996) உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1970 மற்றும் 80 காலகட்டங்களில் சுயாதீன இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.
ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார். இவர் baharat ek khoj மற்றும் samvidhaan ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார். ஷ்யாம் பெனகல் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு mujib: the making of a nation திரைப்படத்தை இயக்கினார்.
மறைந்த இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. மேலும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளார். இந்திய சினிமாவில் பெரும் ஆளுமையாக திகழ்ந்த ஷ்யாம் பெனகல் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.