சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 25) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், அனிருத், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் "உயிரே உலகே தமிழே" என்று தனது பேச்சைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், "உலக சினிமாவில் ஒரு சினிமாவை செய்துவிட்டு அதனை இரண்டாவது முறையாக அதே இயக்குநர் அதனை இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து இரண்டு பேர்தான். ஒருவர் சர்சில் பி டிமில். இன்னொருவர் ஹிட்ச்காக். இன்றுவரை இவர்களது அந்த படங்கள் பேசப்படுகிறது. அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. ஆனால், ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு கிடைத்திருப்பதால் எனக்கும் கிடைத்திருக்கிறது.
இரண்டாம் பாகம் என்னும் ஒரு ஃபேஷன் வருவதற்கு முன்பே நாங்கள் எடுத்துவிட்டோம். இந்தியன் படம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சொன்னேன். இரண்டாம் பாகம் எடுக்க கருவை எங்களுக்கு இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.
ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தாவுடைய இரண்டாவது வருகைக்கு பெரிய அர்த்தமாக இருக்கிறது. நல்லவங்க, கெட்டவங்க எல்லோருக்கும் நன்றி சொல்றேன். காலம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்தியன் 1, 2 ஒரு உதாரணம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சொன்னார், ஷங்கரும் கமலும் நினைத்தாலே இதுபோல் எடுக்க முடியாது என்றார் எடுத்திருக்கோம், அதுதான் இந்தியன் 3.
இயற்கை, கரோனா, விபத்து என பல விஷயங்கள் எங்களுக்கு இடையூறாக வந்தும், அதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்து வந்த லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்களுக்கு என்றென்றும் இந்தியன் 2, 3 கடமைப்பட்டது. இதன் வெற்றியை அனுபவிக்கும் முதல் ஆளாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான் ஷங்கருக்கும், எனக்கும் ஆசையாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கவில்லை, சந்தோஷமாக நடித்தார்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ச்சியாக, இப்போதும் ஊழல் இருப்பதற்குக் காரணம் அரசியல்வாதிகள் தானா யார் காரணம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், "முக்கியமானவங்கள விட்டுவிட்டீர்களே நாமளும்தான். நாம் இல்லாமல் அவர்களால் தனியாக ஊழல் நடத்திடமுடியுமா? நாமளும்தான் ஊழலுக்குக் காரணம். அதையும் தான் இந்த படம் சொல்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:"மகாராஜா படத்தில் கதை என்னுடையது" - விஜய்சேதுபதி படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் திடீர் புகார்!