சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியரான பா.விஜய் சில படங்களை இயக்கியுள்ளார். அவர் சமீபத்தில் இயக்கியுள்ள திரைப்படம் ’அகத்தியா’. இத்திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ளனர்.
'அகத்தியா' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த படக்குழு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைப் பற்றிய கேள்விக்கு ஐசரி கணேஷ் பதிலளித்தார்.
நடிகர் ஜீவா பேசுகையில், “இந்த படத்தின் கதையை கேட்டபோது ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிந்தது. வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும். இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும்.
'அகத்தியா' படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார் பா.விஜய். இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு கருத்தும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.
அதற்காக ஹாரர் - திரில்லர் - காமெடி - ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- என எல்லா விஷயங்களையும் படத்தில் இணைத்துள்ளோம். குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடையும் வகையில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கியுள்ளோம். முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
நடிகர் ஜீவா (ETV Bharat Tamil Nadu) படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஆனால் அந்த கிளைமாக்ஸில் நாங்கள் யாருமே நடிக்கவில்லை. அந்த கிளைமாக்ஸை பார்ப்பதற்காக ஒரு வருடம் காத்திருந்தேன். ஒரு வருடம் கழித்து பார்த்தபோது, உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு தான் போவோம். கதை சொல்வதற்கு முன்பே சில காட்சிகளை படமாக்கியிருந்தோம், அதனை அவரிடம் காண்பித்தோம். அதை பார்த்ததும் கதையை கேட்டு தயாரிக்க ஒத்துக்கொண்டார் ஐசரி கணேஷ். படத்திற்காக ஏராளமாக பொருட்செலவு செய்துள்ளார்.
படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஷி கண்ணா இந்த படத்தில் இருப்பதால் அரண்மையில் வந்த அச்சச்சோ பாடல் மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என பா.விஜய்யிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் ’அகத்தியா’ 2 வில் வைத்துக்கொள்ளலாம் இதில் வேண்டாம் என மறுத்து விட்டார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது," என்றார்.
இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான பா. விஜய் பேசுகையில், “திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர் தேவை. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் படத்தின் வியாபாரத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கதையில் இருக்கும் கன்டென்ட்டை புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனை தயாரிக்க இயலும்.
’அகத்தியா’ படக்குழு (ETV Bharat Tamil Nadu) அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேடிக்கொண்டிருந்தோம். 'களத்தில் சந்திப்போம்' திரைப்படத்தில் ஜீவாவுடன் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அந்த நட்பின் காரணமாக அவரிடம் இந்தப் படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். ஹாரர் படம் ஏற்கனவே செய்துவிட்டேன் என ஜீவா தயங்கினார். இது ஹாரர் படம் இல்லை. ஹாரர் ஃபேண்டஸி படம்.
இந்த திரைப்படத்தில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று சொன்னபோதே அவருடைய அப்பா இந்த படத்தை தயாரிக்க மாட்டார் என சொல்லிவிட்டார். பின்னர் ஜீவா அழைத்து சென்ற தயாரிப்பாளர் தான் ஐசரி கணேஷ். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, நடிகர் அர்ஜுன் என கேட்ட நடிகர்கள் எல்லாம் அமைத்து கொடுத்தார்.
சில கதாபாத்திரங்களுக்கு ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்று சொன்னேன். மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும், 'ஆர் ஆர் ஆர்' படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். மேலும் இந்தப் படத்தின் கதைகளத்திற்காக ஏராளமான அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைத்தும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. அதையும் ஐசரி கணேஷ் அமைத்து கொடுத்தார்.
ஒரு இயக்குநர் எழுதிய திரைக்கதையை அப்படியே எடுத்த திருப்தி அந்த இயக்குநருக்கு கிடைத்தாலே, அது நல்ல படைப்பாக உருவாகும் என என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் சொல்வார். இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்தபோது எனக்கு அந்த மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தான். அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியை சொன்னாலும் போதாது. மிக முக்கியமான விசயத்தை பேசக்கூடிய படமாக அகத்தியா இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க:அஜித் ரசிகர்களுக்கு ஷாக் & சர்ப்ரைஸ்! - சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ காட்சிகள்!
அதன் பிறகு நடந்த கேள்வி, பதில் நிகழ்வில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பற்றி கேள்விக்கு, “வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை. ஆனால் நிறைய இரண்டாம் பாகம் திட்டங்கள் இருக்கிறது” என பதிலளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
கேள்விகளுக்கு பதில் கூறிய நடிகர் ஜீவா, “சூப்பர் குட் பிலிம்ஸில் பெரிய பட்ஜெட் படங்கள்தான் எடுக்கிறோம். இப்போது கொஞ்சம் யோசித்து தான் படம் எடுக்கிறோம். அதனால் தான் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸில் எடுக்கவில்லை. மேலும் சூப்பர்குட் பிலிம்ஸின் 99 வது படம் என்னுடைய படம்தான். 100வது படம் என்னவாக இருக்கும் என இப்போது வரை தெரியவில்லை. ஆனால் இரண்டுமே பெரிய பட்ஜெட் படம் தான். அடுத்ததாக பிளாக் திரைப்பட இயக்குநருடன் இணைந்து ஒரு படம் பண்ணுகிறோம். தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறேன்” என்று பேசினார்.