சென்னை:மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஆவேசம் படம் வெளியானது. இப்படத்தை நஸ்ரியா மற்றும் ஃபகத் ஃபாசில் இணை தயாரித்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுசின் ஷ்யாம் இசையமைத்திருந்தார்.
இதில், மிதுன் ஜெய் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை ரோமான்சம் என்ற நகைச்சுவை படத்தை இயக்கி வெற்றி பெற்ற ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். காமெடி கேங்ஸ்டர் ஜானரில் உருவான இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
சமீபகாலமாக, தமிழ்நாட்டில் மலையாள திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஆவேசம் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் பெற்றது. illuminati, jaada, odimaga என படத்தின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.
மேலும், இப்படத்தின் பாடல்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாக வலம் வருகின்றன. இப்படத்தில் ஃபகத் ஃபாசில் பேசிய ’எடா மோனே’ என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. எப்போதுமே பிற மொழிகளில் வெளியாகும் படங்கள் நன்றாக இருந்தால் அதை வெவ்வேறு மொழிகளில் ரீ-மேக் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆவேசம் திரைப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய பணிகள் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.