சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை திரைக்கதையில் தொய்வு இல்லாமல் நகர்வதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் படமான பொன்மன செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச' பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ’லப்பர் பந்து’ படத்தை பார்த்த பின், பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "திரைப்படம் எடுப்பதற்கு மிகவும் கடினமான உழைப்பு தேவை. அதனால் ஒரு படத்தில் அதிகமாக நல்ல விஷயங்களை மட்டுமே பார்ப்பேன். படத்தில் குறைகளை பற்றி குறைவாகவே பேசுவேன். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் சார்ந்த ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ் படங்கள் அதிலிருந்து விலகி, ஆடியன்ஸுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதனை தெளிவாக சொல்லும் திரைப்படங்களாக உள்ளன.
இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எதிர்ப்பா?..பின்னணி என்ன? - shankar velpari issue
அதில் லப்பர் பந்து ஸ்பெஷல் திரைப்படமாக உள்ளது. லப்பர் பந்து மிகவும் உண்மையாகவும், தனித்துவமாகவும் உள்ளது. படத்தில் ஒரு கேரக்டர் கூட தேவையற்றதாக இல்லை. இப்படத்தை உருவாக்கிய லப்பர் பந்து இயக்குநர் மற்றும் படக்குழுவினர் ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட், மற்றும் பாலா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.