சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படம் 1996இல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் நெடுமுடி வேணு, விவேக், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான 'இந்தியன் 2', எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1996இல் வெளியான இந்தியன் திரைப்படம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் கல்ட் கிளாசிக் படமாக இருந்தது. சுஜாதா வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஷங்கர் இயக்கம் என இன்றளவும் இந்தியன் திரைப்படம் கமல்ஹாசன் திரைவாழ்வில் முக்கியமான படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பிரச்சனைகளை படக்குழு எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து 'இந்தியன் 2' வெளியானது.
இப்படத்திற்கு எதிர்பார்ப்பும் குறைவாக இருந்த நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. முதலாவதாக 3 மணி நேர நீளம் ஆடியன்ஸ்களுக்கு பெரும் குறையாக தெரிந்தது. இந்தியன் முதல் பாகத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது. அதே நேரத்தில் அனிருத் இசையில் ’இந்தியன் 2’ படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் பாகத்தின் கமல்ஹாசனுக்கு வசனங்கள் குறைவாக இருக்கும். ஆனால் அவரது ஆக்ஷன் காட்சிகள் வரவேற்பை பெற்றது.