சென்னை:அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில், 'Truly live in concert' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வரக்கூடும் என்பதால், நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழாவில், நிகழ்ச்சியை நடத்தும் அருண் ஈவன்ட்ஸ் அமைப்பின் தலைவர் அருண் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜூன் மாதம் நடைபெற உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் Bronze, Silver, Gold, VIP, VVIP வரிசையில் டிக்கெட்டுகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், டிக்கெட் கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.3,000, ரூ.6,000, ரூ.10,000 என ரூ.25,000 வரையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் 55 முதல் 60 பாடல்களை இளையராஜா பாட இருக்கிறார்" என்றும் கூறினார்.
மேலும், ஜூன் 14ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சரியாக நிகழ்ச்சி துவங்கும் நிலையில், 3 மணி முதல் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்களுக்கு கார் பார்க்கிங் செய்ய முறையான வசதிகள் மற்றும் அனைத்து கேலரியிலும் மொபைல் டாய்லெட் வசதி இருக்கும்.