சென்னை: சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.