சென்னை:எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ’மெட்ராஸ்காரன்’. இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, கருணாஸ், ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரலைர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கலையரசன். நிகழ்வில் பேசிய அவர், “இனிமேல் நான் துணை கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்கப் போவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என நினைக்கிறேன். நான் நடித்த ஒரு துணை கதாபாத்திரம் தான் இன்றுவரை எனக்கு சோறு போடுகிறது. அதை நான் மறக்கவே மாட்டேன்.
மலையாள சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். வில்லனாகவும் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு, மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் அந்த சூழல் இருக்கிறது. இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால், தொடர்ந்து வில்லனாகவே தான் நடிக்க அழைப்பார்கள். துணை கதாபாத்திரங்களில் நடித்தால், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிக்க அழைக்கிறார்கள்.
கதை எழுதுவதற்கு முன்பே சாவுனு வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். அது பிரச்சனையாகவே உள்ளது. பெரிய ஹீரோ படங்கள் மட்டுமின்றி புதுமுக ஹீரோவாக இருந்தாலும் கூட அந்த படத்திலும் துணை கதாபாத்திரங்களுக்கே அழைக்கிறார்கள். அதனால் இனிமேல் கதைக்கு தேவையான மிக முக்கியமான கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே அதில் நடிப்பேன். மற்றபடி கதையின் நாயகனாவே இனிமேல் நடிக்க முடிவு எடுத்திருக்கிறேன்”, என தெரிவித்தார்.