சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படம் இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எப்போதும் போல ஒரு கிரிக்கெட் போட்டியை பற்றிய திரைப்படம் என நினைத்து படத்தை பார்த்த ரசிகர்களுக்கு, விறுவிறுப்பான அதே சமயத்தில் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் மாமனார், மாப்பிள்ளையாக அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்த படத்தில் விஜயகாந்த் பாடலான ‘பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் இடம்பெற்றது. அது மேலும் பிரபலமடைந்தது. லப்பர் பந்து திரைப்படத்திற்கு வேட்டையன், மெய்யழகன் போன்ற பெரிய திரைப்படங்கள் வெளி வந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு குறையவில்லை. திரைப்படங்கள் ஒரு வாரம் ஓடினாலே வெறி விழா கொண்டாடும் இந்த காலத்தில், லப்பர் பந்து கிட்டதட்ட ஒரு மாதம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.