சென்னை: 2025ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடையப் போகின்றன. தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கமான பொங்கல் பண்டிக்கைக்கு எந்தவித பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாகாததால் திரையரங்க உரிமையாளர்களில் இருந்து பலரும் வருத்தமடைந்தனர்.
ஆனால் அதன்பின் வெளியான படங்களில் ’குடும்பஸ்தன்’, ’டிராகன்’ ஆகிய இரு படங்களே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவை இரண்டும் பட்ஜெட்டை விட அதிகமான லாபம் ஈட்டியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் மாதம் ஒன்றாக வெளியாகவிருக்கின்றன. கடந்த ஆண்டு இப்படியான வெளியீடுகள் பெரிதாக இல்லை. அந்த வகையில் 2025இல் எதிர்பார்க்கப்படும் படங்கள் குறித்து இச்செய்தியில் காணலாம்.
வீர தீர சூரன் பாகம் 2:’தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகே முதல் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த வித்தியாசமான பாணி மற்றும் ‘சித்தா’ படத்திற்கு பிறகு SU அருண் குமார் இயக்கியுள்ள படம் போன்றவற்றால் படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டீசம்பர் மாதம் ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்த இப்படமானது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தால் தள்ளிப் போய் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
குட் பேட் அக்லி: ’விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly). மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வித்தியாசமான சால்ட் அனண்ட் பெப்பர் லுக்கை வெளியிட்டதிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
ஏற்கனவே மார்க் ஆண்டணி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாக தொடங்கியிருக்கிறது. இத்திரைப்படமும் பொங்கள் வெளியீடாகவே முதலில் திட்டமிடப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இட்லி கடை:’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படம் ’இட்லி கடை’. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் (Dawn pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.