சென்னை: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் இன்று (பிப்.18) நடைபெறுகிறது.
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோஸியேட் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
அதன்படி, இசையமைப்பாளர் சங்கத்தின் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இதில் ஆயிரத்து 25 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.