சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'SK23' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பெருங்களத்தூர், வண்டலூர் ஜி எஸ் டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையிலே வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததால் ஜி எஸ் டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெருங்களத்தூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன ஓட்டிகளை அங்கிருந்து அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் நின்று வேடிக்கை பார்ப்பதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.