சென்னை:லார்க் ஸ்டுடியோஸ் - கே. குமார் தயாரித்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் கருடன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சூரி, சசிக்குமார், சமுத்திரக்கனி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.வி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “கருடன் வெற்றிக்கு முதலில் ரசிகர்களுக்கு நன்றி. இன்றைய காலகட்டத்தில் தியேட்டருக்கு ரசிகர்கள் வருவதில்லை. ஓடிடியை நம்பி தான் பிசினஸ் இருக்கிறது. ஓடிடி, சாட்டிலைட்டில் முதலீடு வரும். தியேட்டரில் போனசாக வரும். இந்த வருடத்தில் அதை மாற்றிய இரண்டாவது படம். இந்த வருடம் நல்ல படங்களில் கருடன் இருக்கிறது. ஓடிடிக்கு தேவைப்படும் படங்களை வாங்குவாங்க.
ஆனால், நேரடியாக திரையரங்குகள் மூலமாக மக்களிடம் படங்களை கொண்டு சேர்க்கும் படைப்பு சுதந்திரம், ஓடிடிக்கு போகும் போது இருப்பதில்லை. இப்போது நமக்கு இருக்கும் சூழல் நமது படங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்து போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும் மாடல். அதை வெற்றிகரமாக எடுத்துக் காட்டும் வெகுசில படங்களில் கருடனும் ஒன்று. எல்லா நடிகர்களும் இந்த படத்தில் சூரிக்காக தான் வந்தார்கள். சசிக்குமார் ஒரு விஷயத்துக்காக வந்தார்.
விடுதலை பண்ணும் போது அவருக்கு தோளில் காயம் இருந்தது. அதோடு தான் பண்ணார். அந்த காயத்தோடு தான் இதிலும் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கார் என்றும், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று சூரி நினைப்பது ஒரு இயக்குநருக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். நம்மை இம்ப்ரஸ் & சர்ப்ரைஸ் பண்ண ரெடியாக இருக்கிறார் சூரி.