சென்னை: ’மாஸ்’ திரைப்படம் சரியாக ஓடாததால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ’கோட்’ திரைப்படம் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பல்வேறு நேர்காணல்களில் ’கோட்’ திரைப்பட வெற்றி குறித்தும், தான் இயக்கிய மாஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பெரும் ஸ்டாரை வைத்து படம் இயக்கி, ஃப்ளாப் ஆனால், திரை வாழ்வில் பெரிய அடி விழும். நான் சூர்யாவை வைத்து இயக்கிய ’மாஸ்’ திரைப்படம் சரியாக ஓடாததால் அதற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் ஹீரோக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. என்னுடன் பணிபுரிந்தவர்கள் என்னை விட்டு விலகினர். அந்த சமயத்தில் தான் ’பிளாக் டிக்கெட் கம்பெனி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சென்னை 28 பார்ட் 2 படத்தை உருவாக்கினேன்”. என கூறினார்.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு கோட் திரைப்பட வெற்றி குறித்து பேசுகையில், “கோட் வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதி விஜய் தான். அவர் எனக்கு கதையில் நல்ல சுதந்திரம் கொடுத்தார். அதனை நான் நன்றாக பயன்படுத்த்க் கொண்டேன். மக்கள் கோட் படத்திற்கு பெரும் ஆதரவு அளித்ததால் படம் மெகா ஹிட்டாக அமைந்தது. கோட் திரைப்படம் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படங்களில் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எப்போதும் பெரிய ஹீரோ படங்களில் கதை சரியாக இல்லயென்றால் முதல் வார இறுதிக்கு பிறகு வரவேற்பு பெறாது. ஆனால் உலக அளவில் கோட் நல்ல வசூலை பெற்றுள்ளது. குறிப்பாக மலேசியாவில் அதிக வசூல் செய்த இந்திய படங்கள் வரிசையில் தற்போது கோட் முதலிடம் பிடித்துள்ளது” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு: கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்! - SHYAM BENEGAL PASSED AWAY
அடுத்த இயக்கவுள்ள திரைப்படம் குறித்து கேட்ட போது வெங்கட் பிரபு பேசுகையில், "அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறேன். அந்த படத்தின் திரைக்கதை, வசனங்கள் தற்போது எழுதி வருகிறேன். நடிகர் சிவகார்த்திகேயனிடம் அப்படத்தின் கதையை கூறியுள்ளேன்” என தெரிவித்தார்.