சென்னை:'துரோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுதா கொங்கரா. அதனைத் தொடர்ந்து 'இறுதிச்சுற்று' மற்றும் 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அண்மையில் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கை இயக்கினார். 'சர்ஃபிரா' எனப் பெயரிடப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்து இருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா.
அதில் "நான் வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னுடைய ஆசிரியர் ஒருமுறை சொன்னார். சாவர்க்கர் மிகப்பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். சாவர்க்கர் திருமணம் செய்து, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.
அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத்தான் விருப்பம். ஏனென்றால், அந்த காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவள் படிக்கப் போகும்போது, அந்தத் தெருவில் உள்ளவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். அந்த அம்மா அழுதுகொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் எனச் சொல்வார்.
அப்போது சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா? அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் எழுந்தன" என்றார். இது இணையத்தில் வைரலானது.