சென்னை: தனி இசைக்கலைஞர் அறிவுவின் 'வள்ளியம்மா பேராண்டி' முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. நிறைய புதிய திறமைகளை இமான் ஊக்குவித்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். அதைத் தொடர்ந்து செய்யுங்கள். அறிவு, முதலில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை தான் பாடினார்.
கலை இலக்கியத்தை அரசியல்படுத்த வேண்டும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. அப்படித்தான் சினிமாவுக்கு வந்தோம். நாம் பாடுபட்ட கலை, அரசியல் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது யோசனை. அந்த யோசனைக்குள் இருப்பவர்களுடன் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்து வருகிறோம். அறிவு, மொழி ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. முதன் முதலில் என் முன் பாடிய அறிவு இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்து மாற்றத்தை பார்த்து வருகிறேன்.
காலா படத்திலும் அறிவு எழுதிய பாடல் நன்றாக இருந்தது. அறிவின் வரிகளில் அரசியல் தன்மை இருந்தது. அறிவு நான் பார்ப்பதற்கு முன்பே அம்பேத்கரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அது எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகரித்தது. அதேநேரம் அரசியல் தன்மையை, கருத்தை எப்படி எளிய முறையில் கொண்டு வந்து ரசிகர்களிடம் சேர்ப்பது, கதை மற்றும் அரசியல் தன்மை எப்படி எடுத்துக் கொள்வார்கள், சந்தைப்படுத்துதல் எப்படி என்று பல விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.