சென்னை:இயக்குநர் பா.ரஞ்சித் சினிமாவைத் தாண்டி சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் தனது கருத்தை அவ்வப்போது முன் வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (பிப்.15) அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவனின் பதிவை பகிர்ந்து தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.
மேலும் “கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (பிப்.16) நடந்த தலித் சுப்பையா குறித்த ஆவணப்பட வெளியீட்டில் இவற்றை குறித்து பா. ரஞ்சித் விரிவாக பேசியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசியதாவது, “சாதியைப் பற்றி பேசுவதாலேயே நமக்கு சாதி முத்திரை குத்தப்படும் இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இவனுக்கு வேற வேலையே இல்லை என சொல்லப்படும் இடத்தில்தான் இருக்கிறோம்.
அப்படி சொல்வதின் மூலம் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாங்கள் பேசுவோம். எங்களுக்கான மேடைகளை நாங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். தலித் சுப்பையா ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராக சம்பவம் செய்தவர். கடந்த நான்கு நாட்கலில் தலித்துகளுக்கு எதிராக அவ்வளவு பிரச்சனைகள் நடந்துள்ளது.
ஒரு உண்மைக்கு நிகரா ஒரு உண்மை இங்கு கிடையவே கிடையாது. உண்மைக்கு நிகராக ஒரு பொய்யை உருவாக்குகிறார்கள். அதை சமூக வலைதளங்களில் பேசி இப்படிப்பட்ட ஒரு விஷயமே நடக்கவில்லை என்று ஒரு மாற்றுக் கருத்தை உருவாக்குகிறார்கள். முதலில் பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை நாம் ஏன் விரும்புகிறோம். சும்மா இதனை கூறவில்லை.
ஏற்கனவே இருக்கிற ஆட்சி சமூக நீதிக்கு எதிரான ஆட்சியாக இருப்பதால் புதிய ஆட்சியை விரும்புகிறோம். சமூக நீதியைக் கோரக்கூடிய ஆட்சியை வேண்டுகிறோம். அப்படி ஒரு சமூக நீதி ஆட்சி வந்ததிற்கு பிறகு சாதிய தீண்டாமைகளோ, சமத்துவத்துக்கு எதிரான சம்பவங்களோ அதிகமாக இருக்கிறதென்றால் அது தொடர்பாக கேள்வியை கேட்க முதலில் நீங்கள் உரிமையை தர வேண்டும். கேள்வி கேட்பவரை எதிரிகளாக மாற்றக்கூடாது. கேள்விகளை தவறானதாக மாற்றுவது. நான் கேள்வி கேட்டவுடன் அமெரிக்காவிற்கு சென்றதை தொடர்புபடுத்துகிறார்கள்.
சாதியைப் பற்றி பேசுவதாலேயே நமக்கு சாதி முத்திரை குத்தப்படும் இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இவனுக்கு வேற வேலையே இல்லை என சொல்லப்படும் இடத்தில்தான் இருக்கிறோம். அப்படி சொல்வதின் மூலம் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாங்கள் பேசுவோம்.
எங்களுக்கான மேடைகளை நாங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். தலித் சுப்பையா ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராக சம்பவம் செய்தவர். இங்கிருக்கும் பிரச்சனையை புரிந்துகொள்ள வேண்டும்.எனக்கு 42 வயசு ஆகுது. நான் ஏன் தொடர்ந்து சாதிய பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன்.அது போன்ற சம்பவங்களை தொடர்ந்து கேட்டு வருவதால் தினமும் தலை எவ்வளவு வலிக்கும் என யாராவது யோசித்திருக்கிறீர்களா.
அந்த யோசனையில் இருந்து ஒரு கோபம் வருகிறது. அந்த கோபத்தைக் கூட உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீ எனக்கு என்ன விடுதலையை வாங்கி தந்துவிட முடியும். அப்போது எனக்கான விடுதலையை நான் கோருவேன்.எனக்கான விடுதலையை நான் பெற வேண்டிய காலகட்டம்.