சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய அவரது முதல் படம் 'மாநகரம்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதன்பிறகு விஜய் நடித்த 'மாஸ்டர்', கமல் நடித்த ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்கள் அவரது திரை வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த படங்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் எல்சியூ என்ற சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கினார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய 'லியோ' படமும் எல்சியூவில் இடம்பெற்றது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். கூலி திரைப்படம் எல்சியூவில் இல்லாமல் தனி கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கைதி திரைப்படம் வெளியாகி 5 வருடம் ஆனதை ஒட்டி லோகேஷ் கனகராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது எல்சியூ தொடங்க கைதி படம் தான் காரணம் என படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து இருந்தார். மேலும் எல்சியூ தொடர்பான 10 நிமிட குறும்படம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.