சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். இதுவரை திரையில் பேசத் தயங்கும் கதாபாத்திரங்களை தனது படத்தின் கதை மாந்தர்களாக்கி, அவர்களது துயர வாழ்வை செல்லுலாய்டில் படம்பிடித்து காட்டியவர் மாரி செல்வராஜ். இதுவரை 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் கபடி விளையாட்டு வீரரான மானத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகிறது. தற்போது இவரது இயக்கத்தில் உருவான 'வாழை' என்ற திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகிறது. கலையரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள வாழை படத்தை மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். மாரி செல்வராஜின் வாழ்க்கையைத் தழுவி வாழை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.