சென்னை: செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டியர்’. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, இளவரசு உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது, "சமீபத்தில் வெளியான எனது அனைத்து படங்களும் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். படத்தின் ஓடிடி உள்ளிட்ட வியாபாரங்கள் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள். அப்படி ஒரே நேரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், அனைத்து படங்களும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படம் இந்த சீசனின் கடைசி படமாகும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படத்திற்கு நான் இசையமைத்தேன். அதன்பிறகு இணைந்து நாங்கள் பணியாற்றவில்லை. இந்த கதையை ஐஸ்வர்யா ராஜேஷ் அனுப்பியதும் சிறப்புத் தோற்றம்தான் இருக்கும் என்று நினைத்து, வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று கதை கேட்டேன். இடைவேளை கேட்டதும் அழுதுவிட்டேன். இது லைவ் ரெக்கார்டிங் படம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தோம்.