சென்னை: இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. கங்குவா திரைப்படகுழு இந்தியா முழுவதும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கங்குவா திரைப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த நேர்காணலில் கங்குவா திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி பேசுகையில், “நானும் இயக்குநர் சிவாவும் ஃபிலிம் இன்ஸ்டியூட் படிக்கும் போதிலிருந்து நண்பர்கள். அவர் இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டு படங்கள் இயக்கினார். நான் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தேன். ஆரம்பத்தில் சிவாவுடன் தெலுங்கில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். பிறகு தமிழில் காஞ்சனா, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினேன். அது தற்போது கங்குவா வரை தொடர்கிறது” என்றார்
கங்குவா திரைப்படத்தின் கதை எப்படி உருவானது என்ற கேள்விக்கு, ”கங்குவா கதை உருவாக அஜித் ஒரு முக்கிய காரணம். அவருக்கு சிவா மீது நல்ல மரியாதையும், அவரது சினிமா அறிவு மீது மிகுந்த நம்பிக்கையும் உள்ளது. சிவா பண்ண வேண்டிய படங்கள் இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் எனவும், உங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள், புதிய ஜானர்களை முயற்சி செய்யுங்கள் எனவும் அஜித் கூறிக் கொண்டே இருப்பார். அங்கிருந்து தொடங்கியது தான் கங்குவா. சிவா நிறைய கமர்ஷியல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சிவா கங்குவா கதையை சொல்லும் போது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இது அஜித்துக்கு எழுதப்பட்ட கதை இல்லை” என கூறினார்.
இதனைத்தொடர்ந்து கங்குவா திரைப்படத்தின் மேக்கிங் குறித்து பேசிய ஒளிப்பதிவாளர் வெற்றி, “இதுவரை வந்த படங்களை போல் இல்லாமல் புதிதாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் முக்கிய பங்காற்றியது. கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லாமல் தமிழில் ஏற்கனவே எங்களுடன் வேலை செய்த நிறுவனத்தையே பயன்படுத்தினோம். இப்படத்தில் எது கிராஃபிக்ஸ் காட்சிகள் என்றே தெரியாத அளவிற்கு நன்றாக செய்துள்ளனர்” என்றார்
கங்குவா கதை குறித்து பேசுகையில், “கங்குவா முழுவதும் கற்பனை கதை. இது நூற்றாண்டுகளுக்கு முன் நடக்கும் பழங்குடி மக்களின் கதை என்றாலும் அரண்மனைகள், கோட்டைகள் எதுவும் வராது. காடுகளில் நடக்கும் கதை என்பதால் இயற்கை ஒளியை பயன்படுத்தி இப்படத்தை உருவாக்க முடிவு செய்தோம். இயற்கை ஒளியில் படம் எடுக்கும் போது நிறைய சவால்கள் இருந்தது. அதற்காக நிறைய பயிற்சி எடுத்தோம். அதற்காக இயற்கையின் ஒத்துழைப்பும் இருந்ததால் நல்லபடியாக எடுக்க முடிந்தது. நெருப்பு பாடல் முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பாடலை தீப்பந்தம் வைத்து எடுத்தோம்” என கூறினார்.