சென்னை: கேரளா அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்து வருகின்றனர். இதன் விளைவாக மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகக் குழு தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து பல்வேறு மொழி சினிமாத்துறை நடிகர், நடிகைகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் ஜீவா நேற்று தேனியில் ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பியபோது, "தமிழ் திரைத்துறையில் பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று ஜீவா கூறினார். மேலும் ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் மேலும் கூற வற்புறுத்தியதாகவும், அதற்கு செய்தியாளர்களை ஜீவா ஒருமையில் பேசியதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாடகி சின்மயி, நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்த வீடியோவை பதிவிட்டு, “தமிழ் சினிமாத் துறையில் பாலியல் தொந்தரவு இல்லை என இவர்கள் எவ்வாறு கூறுகிறார் என எனக்கு புரியவில்லை” என விமர்சித்துள்ளார்.