சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ’உதயம்’ திரையரங்கம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இடிக்கப்படவுள்ளது. சென்னை, அசோக் பில்லர் பகுதியில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம் கடந்த 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் இந்த தியேட்டருக்கு மவுசு அதிகரித்தது.
எம்.ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கில், ரஜினிகாந்த் நடித்த ’சிவப்பு சூரியன்’ திரைப்படம் முதலில் திரையிடப்பட்ட திரைப்படமாகும். இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் உதயம் திரையரங்கில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது.
உதயம் திரையரங்கம் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரைகளை கொண்ட மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கம் ஆகும். தமிழ் சினிமாவில் பல காட்சிகள் உதயம் திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த உதயம் தியேட்டர் எந்த அளவிற்கு பிரபலம் என்றால் அஜித் நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ என்ற படத்தில் ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்தை தொலைத்தேன்’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.