மதுரை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாகிறது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசர் மற்றும் நேற்று (அக்.2) வெளியான டிரெய்லர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படம் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மிரட்டும் சூப்பர் ஸ்டார்... 'வேட்டையன்' டிரெய்லர் வெளியானது! - vettaiyan trailer
இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு தொடர்ந்த வழக்கில், “வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(அக்.3) நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்கவுண்டரை ஆதரிப்பது போல ’வேட்டையன்’ படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், மனு குறித்து விளக்கம் கேட்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் லைகா நிறுவனத்தித்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்