ஹைதராபாத்:பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்குs சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட கட்டடத்தை தெலங்கானா அரசு இடித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மாதாபூர் என்ற பகுதியில் நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமாக உள்ள N-convention Centre என்ற கட்டடம் தும்மிடிகுண்டா என்ற ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு (HYDRA) என்ற மாநில அரசுத்துறை அந்த கட்டடத்தை இடித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "N-convention Centre முழுவதும் எனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செயல் அரங்கேறியுள்ளது.
இது முழுவதும் பட்டா இடம், ஏரிக்குச் சொந்தமான ஒரு அங்குல இடத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை. நாங்கள் எந்தவித சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடவில்லை. தவறான தகவலின் பேரில் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தீர்ப்பில் நான் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன்.