சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் குடி பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது என்பது குடி நோய் என்றும் பேசினார்கள். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மட்டும் அவர்களிடமிருந்து வேறுபட்டு குடிப்பழக்கம் எத்தனை புனிதமானது என சர்ச்சையாக பேசியுள்ளார்.
அவர் பேசும் போது, இந்த மேடையில், ‘தமிழ் சினிமாவில் அதிகமாக குடித்தவனும் குடித்துக்கொண்டிருப்பவனும் நான் தான். தமிழ்நாட்டில் ஆதியில் இருந்து குடிப்பழக்கம் இருக்கிறது. எல்லா சமூகங்களிலும் மதுப் பழக்கம் இருக்கிறது. மதுப்பழக்கம் இல்லாத சமூகமே இல்லை. உலகம் முழுவதும் எங்கு போனாலும் மது இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பல வருடங்கள் பழமையான ஒயினை விலை மதிப்பில்லாததாக பார்க்கிறார்கள். அதனால் மதுவைப் பற்றி எனக்கு முழு விவரமும் தெரியும்.
நானே சாராயம் காய்ச்சும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் எனக்கு தெரியும். நானும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன்தான். ஆனால், ஒரு நாள் கூட நான் அந்த மதுவிற்கு கட்டுப்பட்டது கிடையாது. நான் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது, குடிக்க ஆரம்பித்து சினிமா பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்போம்.
நான் இளையராஜாவை பாட ஆரம்பித்து விடுவேன். அதனால் யாராவது மதுவை வாங்கி கொடுத்து விடுவார்கள். கல்லூரியில் படிக்கும்போது மது அருந்திவிட்டு பாட்டுப் போட்டியில் இளையராஜாவின் 'பொன்னைப் போல ஆத்தா' பாடலைப் பாடினேன். மூன்று வருடங்களும் அதே பாடல்தான் பாடினேன், மூன்று வருடங்களும் நான் தான் முதல் பரிசு வாங்கினேன். குடி இருக்கும்பொழுது எனது வாழ்க்கை சந்தோசமானதாகவும், நம்பிக்கையானதாகவும் இருந்துகொண்டே இருந்தது.