ஐதராபாத் :பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. முதலில் அவருக்கு இருதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காலில் ஏற்பட்ட ரத்த உறைதல் காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி காட்டுத் தீயாக பரவியது. அவரது உடல் நலன் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறி வெளியான செய்தியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முற்றிலும் மறுத்து உள்ளார். குறிப்பாக அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான சில மணி நேரத்தில், மும்பை தானே மைதானத்தில் நடைபெற்று முதலாவது ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.
தனது மகன் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருடன் அமிதாப் பச்சன் ஒன்றாக அமர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்பதை நிரூபணம் செய்வது போல் ரசிர்களை நோக்கி கைகளை அசைத்து ஆரவாரப்படுத்திய அமிதாப் பச்சனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.