சென்னை:தமிழ் சினிமாவில் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்பது அந்த காலம் முதல் தற்போது வரை நிறைய வந்துள்ளன. குறிப்பாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் வந்துள்ளன. கப்பலோட்டிய தமிழன், பெரியார், பாரதியார், காமராஜர் என நிறைய படங்கள் தமிழில் வந்துள்ளன.
ஆனால், அவையெல்லாம் ஆவணப்பட பாணியில் எடுக்கப்பட்டன. அதன் பிறகு, ஒரு சில படங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார் போல் எடுக்கப்பட்டுள்ளன. அப்படி, சமீபத்தில் தமிழில் வந்த சில வாழ்க்கை வரலாற்று படங்களைப் பார்க்கலாம்.
மகாநடி (நடிகையர் திலகம்):இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் தமிழில் நடிகையர் திலகம் என்று வெளியிடப்பட்டது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
நடிகர் ஜெமினி கணேசனைக் காதலித்த சாவித்திரி, அதன் மூலம் பெற்ற துயரங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட அவரது திரை வாழ்வு பற்றி இப்படம் பேசியது. இப்படத்தில் சாவித்திரியாக அற்புதமான நடிப்பை வழங்கி இருந்தார், கீர்த்தி சுரேஷ். இதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று:இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. தொழிலதிபர் ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக இது உருவாக்கப்பட்டது. இதில், சூர்யாவின் சிறந்த நடிப்பு மற்றும் சுதா கொங்கராவின் அற்புதமான இயக்கம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
மேலும், பல தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. சாமானியனுக்கு எட்டாத உயரத்தில் இருந்த விமான பயணத்தை அனைவருக்கும் கிடைக்கும்படி குறைந்த விலையில் விமான சேவையைத் தொடங்கியவர் கோபிநாத். ஏராளமான சர்வதேச விருதுகளை கைப்பற்றிய இப்படம், ஆஸ்கர் ரேஸிலும் முத்திரை பதித்தது.
800:இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டு கடந்தாண்டு வெளியானது. இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில், மதுர் மிட்டல் முரளிதரனாக நடித்தார். கிரிக்கெட் மீதான ஆர்வம், இலங்கை அணியில் இடம் பிடிப்பது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தது என அவரது வாழ்வின் முக்கிய பகுதிகளை படம் பிடித்து காட்டியிருந்தனர்.