சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படமாக ஜனவரி 10ஆம் தேதி சங்கராந்தி அன்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் ’கேம் சேஞ்சர்’. இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பட வெளியீட்டு புரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழு மும்முரமாக இயங்கி வருகிறது.
அமெரிக்காவில் நடந்த முன்வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நேற்று (ஜனவரி 4) படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்திரனாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். துணை முதல்வராக பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் குறித்து பேசிய பவன் கல்யாண், "நான் முன்பு சென்னையில் இருந்த போது ஷங்கர் சாருக்காக பிளாக்கில் டிக்கெட் வாங்கி ஜென்டில்மேன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் நடிகனாக மாறுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. அவரது காதலன் படம் வந்த நேரம் என்னுடன் யாரும் இல்லாததால் என்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு போனேன். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். அவரது படங்களில் பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் முக்கியமான சமூக கருத்தும் இருக்கும்.