டிஸ்சார்ஜ் ஆன பின்பு மகனின் கால்பந்து போட்டியை காணச் சென்ற அஜித் சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. சமீபத்தில் ஓய்வில் இருந்து வந்த அஜித்குமார், இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்லவுள்ளார்.
இதற்காக மருத்துவப் பரிசோதனை செய்ய அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அப்போது, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில், காதுகளுக்கு கீழ் மூளைக்குச் செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்து அவரது மேலாளர் அளித்த விளக்கத்தில், “மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அஜித்குமார், இன்று அதிகாலை வீடு திரும்பினார். மேலும், அஜித்குமாரை மருத்துவமனையில் பல திரைப்பட இயக்குநர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவருக்கு மூளையில் கட்டி, தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு, படப்பிடிப்பு ரத்து என எந்த வதந்தியும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அஜித்குமார், தனது மகன் விளையாடிய கால்பந்து போட்டியைக் காண மைதானத்திற்குச் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:அஜித்குமாரை நலம் விசாரித்த விஜய்!