சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் டிரெயிலர் இன்று (ஜன.16) மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரெய்லருடன் படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்புடன் தொடங்கிய ’விடாமுயற்சி’ திரைப்படம், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அஜித்குமார் படம் மூன்று வருடங்களுக்கு பிறகு வருகிறது என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்த நிலையில், இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர், துபாய் கார் ரேஸின்போது தனது படங்கள் தொடர்பான கேள்விக்கு ஒரு படம் ஜனவரியிலும் மற்றொரு படம் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகலாம் என அஜித்குமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் குடியரசு தின விடுமுறையை கருத்தில் கொண்டு ஜனவரி 23ஆம் தேதி ’விடாமுயற்சி’ வெளியாகும் என எதிர்பார்க்கபட்டது. இந்நிலையில் இப்படம் மீண்டும் தள்ளிப்போவதாகவும், பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கமல், சூர்யா, அஜித் என வரிசையாக பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்
‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் அதனுடன் சேர்த்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு பிப்ரவரி 6ஆம் தேதி பட வெளியீடு என்பதை அனைத்து விநியோகஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ’விடாமுயற்சி’ திரைப்படமானது ஹாலிவுட் படமான ‘ப்ரேக் டவுன்’(Breakdown) படத்தின் தழுவல் என்பது நினைவுக் கூரத்தக்கது.