சென்னை:இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எழுந்துள்ளது. ஏனென்றால், மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பது போன்ற ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.