சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை என்பது சற்று அதிகம்தான். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை ஆகியோரின் வாரிசுகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அப்படி வருபவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்களா? என்றால் கேள்விக்குறி தான். என்னதான் வாரிசு என்ற முன்னுரிமையில் வந்தாலும், திறமையும் கடின உழைப்பும் இருந்தால் தான் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியும்.
விஜய், சூர்யா, கார்த்தி இவர்கள் எல்லாம் தங்களது அப்பாவின் தயவில் வந்தாலும், தங்களது கடின உழைப்பு மற்றும் திறமையால் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்றனர். இதுபோல அருண் விஜய் எப்போதே தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார்.
அப்படி இன்னும் நிறைய பேர் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர், திரைக்கதை மன்னன் என்று பாராட்டப்படுபவர் பாக்யராஜ். தனது படங்களில் வித்தியாசமான திரைக்கதை மூலம் அனைவரையும் ரசிக்க வைத்தவர். இப்படி பல வெற்றிப் படங்களை கொடுத்தவரின் மகன் தான் சாந்தனு. சினிமா ஆசையால் தனது அப்பா இயக்கிய 'வேட்டிய மடிச்சு கட்டு' படத்தில் சிறுவனாக அறிமுகமானார்.
பின்னர் வளர்ந்ததும் 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பு, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசை என மிகப் பிரமாண்டமான முறையில் வெளியான அப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு சித்து +2, தங்கர் பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி, பார்த்திபன் இயக்கத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
ராசியில்லாத நடிகர் என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்தது திரைத்துறை. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதனால் நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவரது ராவண கோட்டம் படமும் இவருக்கு தோல்விப் படமாக அமைந்தது.