சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள 50வது திரைப்படம் அந்தகன். இப்படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்த் உடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று அந்தகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்திருந்தனர்.
அதன்பின்னர் நடிகர் பிரசாந்த், நடிகைகள் சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரசாந்த், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது மகிழ்ச்சியாகவுள்ளது. படம் சிறப்பாக வந்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி. அனைவரும் படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிம்ரன், “பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடித்ததை மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து மிகவும் ரசித்து பார்த்தேன். ஊர்வசி, சமுத்திரகனி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தியாகராஜன் சாருக்கு மிகவும் நன்றி” என்று கூறினார்.