சென்னை:தமிழ் சினிமாவில் தனது சமூக சீர்திருத்த நகைச்சுவைகள் மூலம் அனைவரையும் சிந்திக்க வைத்தவர் நடிகர் விவேக். காமெடி மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் புரட்சிகர கருத்துக்களை பேசியவர். அதுமட்டுமின்றி, அப்துல் கலாமின் சீடராக இருந்து ஏராளமான மரக்கன்றுகள் நட்டவர்.
நடிகர் விவேக், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான படங்களில் சமூக கருத்துக்களை பேசிய விவேக் மறைந்தது, அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. விவேக் மறைவின் போது, அவர் இருந்த வீதி முழுவதும் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இது காண்போரை கலங்க வைத்தது.
கடைசியாக லெஜன்ட் சரவணன் நடித்திருந்த 'லெஜன்ட்' படத்தில் விவேக் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடிகர் விவேக் நடித்துள்ளார். விவேக் மறைவை ஒட்டி, இவரது நினைவாக தமிழ்நாடடு அரசு சென்னையில் இவர் குடியிருந்த வீட்டிற்கு அருகே உள்ள சாலைக்கு சின்னக் கலைவாணர் சாலை என பெயர் வைத்தது.