சென்னை: 'மதகஜராஜா' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் காய்ச்சலுடன் பங்கேற்றுள்ளார். ஜெமினி ஃபிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2012இல் உருவான திரைப்படம் ‘மதகஜராஜா’. 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மதகஜராஜா ஒரு வழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில் மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுந்தர்.சி, குஷ்பு, விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் நடிகர் விஷால் கடும் காய்ச்சலுடன் பங்கேற்றுள்ளார். அவர் மேடையில் காய்ச்சலுடன், மைக்கை பிடிக்க முடியாமல் கை நடுக்கத்துடன் பேசுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்படத்தில் விஷால் my dear lover என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் மேக்கிங் வீடியோ 12 வருடங்களுக்கு முன்பே சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் நேற்று மேடையில் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, விஜய் ஆண்டனி ஆகியோரை பாராட்டினார். இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, “நாங்கள் பொங்கல் வெளியீடு என அறிவித்தவுடன் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஆச்சர்யப்பட வைத்தது. இது பொங்கல் பண்டிகையை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் 80களில் வெளியான முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற ஜனரங்சக படங்கள் போன்று இருக்கும்” என்றார்.