சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
எனினும் தங்கலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. தங்கலான் ரிலீசாகி 4 நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 18) சில முக்கிய திரையரங்குகளில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட தங்கலான் படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் தங்கலான் திரையிடப்பட்டது.